பரம்பரைச்சொத்து சட்டங்கள்: உங்கள் உரிமைகள் மற்றும் கடமைகள் எவை?

Australia Explained - Inheritance Laws

Who inherits if there is no Will? Credit: AlexanderFord/Getty Images

ஆஸ்திரேலியாவில் பரம்பரைச் சொத்து வைத்திருப்பவர்கள் மற்றும் அந்தச் சொத்துக்கு உரிமையானவர்களுக்கு இருக்கின்ற கடமைகள் மற்றும் உரிமைகள் தொடர்பில் Melissa Compagnoni ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.


வேறு சில நாடுகளைப் போலல்லாமல், ஆஸ்திரேலியர்கள் தாங்கள் பெற்ற பரம்பரைச்சொத்துக்களுக்கு inheritance tax செலுத்துவதில்லை.

இருப்பினும், ஆஸ்திரேலியாவில் பரம்பரைச்சொத்துகள் தொடர்பில் கடுமையான சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. மேலும் 50 வீதத்திற்கும் அதிகமான ஆஸ்திரேலியர்கள் உயில் எழுதிவைக்காமல் இறப்பதால், நீதிமன்றங்கள் இவ்விடயத்தில் தலையிட நேரிடுகின்றது.

இந்தப்பின்னணியில் பரம்பரைச்சொத்து தொடர்பான ஆஸ்திரேலிய சட்டங்கள் பற்றியும் அதில் உங்கள் உரிமைகள் மற்றும் கடமைகள் என்னென்னவென்றும் பார்ப்போம்.

ஒருவர் இறக்கும்போது தனது சொத்துக்கள் அனைத்தையும் தனது உறவினர்கள் அல்லது நண்பர்களுக்கு விட்டுச்செல்கிறார். இப்படியான சொத்துகள் ' deceased estate' என்று அழைக்கப்படுகிறது, மேலும் அதைப் பெறுபவர்கள் 'பயனாளிகள்' என அழைக்கப்படுகிறார்கள்.

சொத்துகள், வீடுகள் , வங்கிக் கணக்குகள், கார்கள் என பலவகைப்பட்ட சொத்துகள் இப்படியாக ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு கடத்தப்படலாம் என விளக்குகிறார் State Trustees விக்டோரியாவின் Trustee Services நிர்வாக பொது மேலாளர் Melissa Reynolds.
Australia Explained - Inheritance Laws - Supreme Court
Melbourne Supreme Court issued widespread Australian gagging order over political bribery allegations revealed by 'Wikileaks' today 30-July-2014 Melbourne Australia Credit: Nigel Killeen/Getty Images
இறந்த பிறகு தனது சொத்துக்கள் எவ்வாறு பிரிக்கப்பட வேண்டும் என்பதை கோடிட்டுக் காட்டும் உயிலை ஒருவர் தயாரித்துவைத்திருந்தால் அவரது சொத்துக்களை உரியவர்களுக்கு கையளிப்பது எளிதான விடயமாக இருக்கும்.

உயிலில் குறிப்பிட்டுள்ளவற்றை நடைமுறைப்படுத்துவதற்கென executor எனப்படும் அறங்காவலர் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்.

குறிப்பிட்ட executor ஒரு பயனாளியாகவும் இருக்கலாம்.

Executorஇன் பொறுப்பு, இறந்தவரின் விருப்பங்களை நிறைவேற்றுவதும், அனைத்து கடமைகளும் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்வதும் ஆகும்.

இவ்வாறு executor நியமிக்கப்படாத சந்தர்ப்பங்களில், நீதிமன்றங்கள் தலையிட வேண்டியிருக்கலாம் என்று கூறுகிறார் பிலிப்பைன்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளிலும் சட்டத்துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்ட Florante Abad.

நீங்கள் ஒரு executorஆக நியமிக்கப்பட்டுள்ளபோதிலும், உங்களால் அந்தக் கடமைகளை நிர்வகிக்க முடியாது என உணர்ந்தால், உங்கள் சார்பாக செயல்பட State Trusteesஐ நீங்கள் அனுமதிக்கலாம். இந்த அரச நிறுவனம் பொதுமக்களுக்கு அவர்களது வாழ்க்கையின் இறுதிக் கடமைகளில் உதவுகிறது.

ஒரு executor பயனாளிகளைத் தொடர்பு கொண்டு ‘probate’ எனப்படுகின்ற, உயில் செல்லுபடியாகும் என்பதையும் அதை executor நிர்வகிக்கலாம் என்பதையும் நிரூபிக்கின்ற நீதிமன்ற உத்தரவுக்கு விண்ணப்பிக்க வேண்டுமென்கிறார் Melissa Reynolds.
Probateக்கான ஒவ்வொரு விண்ணப்பத்தையும் உச்ச நீதிமன்றம் பதிவு செய்கிறது. தேவையேற்படின் உங்கள் பகுதியில் உள்ள உச்ச நீதிமன்ற Probate Registryஐ நீங்கள் பார்க்கலாம்.

இருப்பினும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஒருவர் உயில் இல்லாமல் இறந்துவிடுகின்றபோது அவரது சொத்துக்களை யார் பெறுகிறார்கள் என்பதை சட்டம் தீர்மானிக்க வேண்டும் என Melissa Reynolds கூறுகிறார்.

உயில் இல்லாமல் சொத்துக்களைப் பிரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் முறைமை Succession Act என்று அழைக்கப்படுகிறது.

பெரும்பாலான சொத்துக்கள் பொதுவாக இறந்தவரின் துணைக்கு செல்கின்றன. மீதமுள்ளவை அவர்களது குழந்தைகளுக்கும் செல்லும்.

Succession Act உறவினர்களை ஒரு குறிப்பிட்ட வரிசையில் பட்டியலிடுகிறது என Florante Abad விளக்குகிறார்.

குறிப்பாக இறந்தவருக்கு மனைவி இருக்கிறார் ஆனால் அவர்களுக்கு பிள்ளைகள் இல்லையென்றால் இறந்தவரின் சொத்துக்கள் முழுவதும் மனைவிக்குச் செல்லும். ஆனால் மனைவியோ பிள்ளைகளோ இல்லை என்றால் சொத்துக்கள் பெற்றோருக்குச் செல்லும். பெற்றோர் இல்லையென்றால் மாமா, அத்தை போன்ற ஏனைய உறவினர்களுக்குச் செல்லும். உறவினர்களும் யாரும் இல்லையென்றால் சொத்துகள் மாநிலத்திற்குச் சொந்தமாகும்.

அதிர்ஷ்டவசமாக, ஆஸ்திரேலியாவில் நாங்கள் பரம்பரைச்சொத்துக்கான வரி செலுத்துவதில்லை, ஆனால் நிதி தொடர்பான கடமைகள் உள்ளன.

குறித்த சொத்துக்களை நீங்கள் விற்க முடிவு செய்தால், ஆஸ்திரேலிய வரி அலுவலகம் பரம்பரைச் சொத்திற்கு வரிவிதிப்பு விதிகளைப் பயன்படுத்துகிறது என்கிறார் Certified Public Accountant, Akram El-Fahkri
Australia Explained - Inheritance Laws
Cropped shot of a senior couple meeting with a consultant to discuss paperwork at home Credit: shapecharge/Getty Images
1985க்குப் பிறகு வாங்கப்பட்ட முதலீட்டுச் சொத்தை நீங்கள் விற்கும்போது CGT- capital gains tax பொருந்தும்.

வங்கிக் கணக்குகளும் மரபுவழியாக பெறப்படுவதால் ஏதேனும் வங்கி வட்டி கிடைத்தால் அதை உங்கள் வரித்தாக்கலின்போது அறிவிப்பது முக்கியம்.

அதேபோன்று பங்குகள் பணமாக மாற்றப்பட்டு, பயனாளிகளிடையே பிரிக்கப்பட்டால், நீங்கள் Capital Gains Taxஐயும் செலுத்துவீர்கள்.

ஆனால் வெளிநாட்டில் உங்களுக்குப் பரம்பரைச்சொத்து கிடைக்கும்பட்சத்தில் அதற்கு பெரும்பாலும் வரி இருக்காது என்கிறார் Akram El-Fahkri.

ஆனால் ஒரு பயனாளி நாட்டில் நிரந்தரமாக வாழாதவராக இருக்கும்போது சிறப்பு Capital Gains Tax விதிகள் பொருந்தும், எனவே தொழில்முறை ஆலோசனையைப் பெறுவது சிறந்தது.

இதேவேளை ஒருவர் உயில் எழுதாமல் இறந்துவிட்டார் அல்லது உயிலில் உங்கள் பெயர் சேர்க்கப்பட்டிருக்கவில்லை என்றபோதிலும் அவருடைய சொத்துக்களில் உங்களுக்கு உரிமை உண்டு என்று நீங்கள் நம்பினால் என்ன செய்வது?

Succession Actஇன் கீழ் அதை சவால் செய்ய உங்களுக்கு உரிமை உள்ளது எனவும் இது Public Family Provision Claim என்று அழைக்கப்படுகிறது எனவும் Florante Abad விளக்குகிறார்.

வீட்டுச் சொத்துக்களுக்கு tax-free கால அவகாசம் இருப்பதால், சொத்துக்களை முதலில் விற்பதற்குப் பதிலாக பயனாளிகளுக்கு வழங்குவதே வழக்கமான ஆலோசனையாகும் என்று Akram El-Fahkri கூறுகிறார்.

பரம்பரைச்சொத்து விவகாரம் சிக்கலானதாக இருக்கலாம், ஆனால் Law Institute of Victoria மற்றும் Law Society of NSW போன்ற நிறுவனங்கள் ஊடாக எப்போதும் உதவி பெறலாம் என Melissa Reynolds கூறுகிறார். அதுமட்டுமல்ல ஒவ்வொரு மாநிலத்திலும் பிராந்தியத்திலும் State Trusteesஉம் உள்ளன என அவர் நினைவூட்டுகிறார்.
Australia Explained - Inheritance Laws
codicil to a last will and testament and irrevocable trust being signed by a 50 year old woman. Credit: JodiJacobson/Getty Images
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share