என்னென்ன மாற்றங்கள்? எப்பொழுதிலிருந்து மாற்றம் வருகிறது? எப்படியெல்லாம் அது நம்மை பாதிக்கும்? என்னென்ன எதிர்ப்புகள்? என்னென்ன மாற்றங்களை அரசு செய்யமுடியாமல் போனது? இப்படி பல கேள்விகள் எழுகின்றன.
என்னென்ன மாற்றங்கள்?
இனி ஒருவருக்கு ஒரேயொரு Superfund மட்டுமே. அதாவது, உங்கள் முதல் வேலையில் ஒரு Superfund (Superannuation நிதியில்) தொடங்கினால், நீங்கள் அடுத்தடுத்த வேலைகளுக்குப் போகும் போதும் அதே Superfund உங்களைத் தொடரும். நீங்கள் வேலையை மாற்றலாம்; ஆனால் நீங்கள் விரும்பாதவரை Superfund மாறாது.
நீங்கள் தொடங்கிய முதல் வேலையில் ஒரு நிதியின் கீழ் உங்களை நீங்கள் பதிவு செய்திருப்பீர்கள். இரண்டாவது வேலைக்கு மாறும் போது, பதிவு செய்திருந்த நிதியை புதிய வேலைக்கு மாற்றுவதில் இருக்கும் சுமையைக் கருத்தில் கொண்டு வேறு ஒரு நிதியில் பதிவு செய்வீர்கள். இப்படியே ஒவ்வொரு வேலை மாறும் போதும் நடக்கும். இப்படி பத்து பதினைந்து நிதிகளில் பதிவு செய்திருந்தால், எல்லோருக்கும் நீங்கள் வெவ்வேறு கட்டணம் கட்டவேண்டி இருக்கும். பண விரயம், கூடவே தலைவலி தான் மிச்சம்.
இப்போதைக்கு அது மாற்றப்பட்டு விட்டது. நீங்கள் இரண்டாவது வேலைக்குப் போகும் போது, முதல் வேலையில் பதிவு செய்த நிதி தானாகவே உங்களைத் தொடரும்.அது எப்படி? நான் எந்த superfund-இல் இருப்பது என்பதை நானாக முடிவு செய்ய முடியாதா? அதற்கான சுதந்திரம் இல்லையா? என நீங்கள் கேட்கலாம்.
Superannuation Source: Getty Images
சுதந்திரம் இருக்கிறது. நீங்கள் விரும்பினால் வேறு ஒரு நிதிக்கு மாறிக்கொள்ளலாம். ஆனால் ஒருவருக்கு ஒரு superfund மட்டுமே. இந்த மாற்றம் நவம்பர் 1ம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வருகிறது.
Superfund-க்கு போட்டியும் சோதனையும்
இப்போது ஒவ்வொரு Superfund-உம் அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என ஆண்டு தோறும் நமக்கு அறிக்கை அனுப்புகிறார்கள். அதை வைத்து மட்டும் தான் அதன் செயல்பாட்டை நாம் கணிக்க முடியும். மற்ற நிதிகளின் செயல்பாட்டைப் பற்றி தெரிந்து கொள்வது கடினம். இனிமேல் அது எளிதாகிவிடும். எப்படி?
அனைத்து Superfund நிறுவனங்களுக்கு வைக்கப்படும் தேர்வில் அவர்கள் பாஸா, ஃபெயிலா எனப் பார்த்து நீங்கள் முடிவு செய்து கொள்ளலாம். அதாவது, ஒவ்வொரு Superfund நிறுவனம் வருடாந்திர மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்படும். அவர்கள் நிதியை வெற்றிகரமாக கையாளுகிறார்களா? இல்லையா என மதிப்பீடு செய்யப்படும். இரண்டு வருடங்களாக ஒரு Superfund நிறுவனம் தங்களுடைய இலக்குகளைத் தவறவிட்டால், அந்த நிறுவனத்தில் அரசு தலையிடும். தங்களை சரிசெய்து கொள்ளும் வரை, புதிய உறுப்பினர்களைச் சேர்க்க முடியாது என தடை செய்யவும் வாய்ப்பு இருக்கிறது.
இப்படி, Superfund நிறுவனத்தின் செயல்பாட்டை எட்டு ஆண்டுகளுக்கு கவனித்து, அதன் போக்கை தீர்மானிப்பார்கள். ஒவ்வொரு Superfund நிறுவனமும் எப்படி செயல்படுகிறது, எவ்வளவு கட்டணம் வசூலிக்கிறது என்பதையெல்லாம் பார்த்து அவைகளுக்கு public ranking போடப்படும். அந்த பொதுவான தரவரிசையைக் கொண்டு நாமே எந்த Superfund நிறுவனம் நல்ல லாபத்தை ஈட்டித் தருகிறது என்பதை அறிந்துகொள்ளலாம்; விரும்பினால் அந்த Superfund நிறுவனத்திடம் சேரலாம்.
அப்படிப்பட்ட Superfund நிறுவனம் குறித்த முதல் மதிப்பாய்வு வருகிற அக்டோபர் மாதத்தில் இருக்கிறது. இந்த மதிப்பாய்வு, துவக்கத்தில் எல்லா Superfund நிறுவனங்களுக்கும் கிடையாது. MySuper சேவைகளை மாத்திரமே மதிப்பிடும். இவைகள் தான் வழக்கமாக ஊழியர்களுக்கு தரப்படுகின்றன. இந்த மாற்றம் நவம்பர் 1ம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வருகிறது.
Casual workers, experts and trade unions have expressed concern that new workplace reforms could lead to further job insecurity. Source: Getty
வேலை செய்யும் அனைத்துப் பணியாளர்களுக்கும் உரிமை
Superfund நிறுவனத்தில் மாதம் 450 டாலருக்கும் குறைவாக சம்பளம் ஈட்டுகின்றவர்கள் நுழைய முடியாத சூழ்நிலை இருந்து வந்தது. இப்பொழுது அரசு அந்த வரம்பை அகற்றிவிட்டது. அதாவது, இப்பொழுது அனைத்து தொழிலாளர்களும், அவர்கள் எவ்வளவு சம்பாதித்தாலும், பணியில் நியமித்தவரிடமிருந்து super payments களைப் பெறலாம். இந்த வரம்பினால் கிட்டத்தட்ட 300,000 தொழிலாளர்கள் Superfund க்குள் நுழையமுடியாமல் இருந்தார்கள். இதில் 63% பேர் பெண்கள். இனி அவர்கள் Superfund- ஐ பயன்படுத்தலாம்.
மாதம் 450 டாலருக்கும் குறைவாக சம்பாதிக்கும் பகுதி நேர தொழிலாளர்களும், ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்பவர்களும் Superfund-இல் இணையலாம் என்பது மகிழ்ச்சியான செய்தி என்றே பலரும் கருதுகின்றனர். இது அடுத்த ஆண்டு ஜூலை மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து செயல்முறைக்கு வர முன்மொழியப்பட்டுள்ளது.
Source: Getty Images
முதல் வீடு வாங்க, பணம் திரும்பப் பெறும் தொகை அதிகரிப்பு
First Home Super Saver Scheme (FHSSS) எனப்படும் முதல் வீட்டிற்கான சேமிப்புத் திட்டத்திற்காக ஒருவர் திரும்பப் பெறும் தொகை (withdrawal amount) 30,000 டாலர்களிலிருந்து 50,000 டாலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுவரை, ஒருவர் முதன் முதலாக வீடு வாங்க வருடத்திற்கு 15,000 டாலர்கள் தன்னார்வமாக பங்களிக்கலாம் எனவும், ஆக மொத்தம் 30,000 டாலர்கள் வரை Superfund நிறுவனத்தில் சேமிக்கலாம் எனவும் இருந்தது. அதை இப்பொழுது மாற்றி அதிகபட்சம் ஒரு நபர் 50,000 டாலர்கள் வரை கொடுக்கலாம் எனவும், தம்பதிகளாக இருந்தால் 100,000 டாலர்கள் வரை கொடுக்கலாம் எனவும் முன் மொழியப்பட்டிருக்கிறது. அப்படி கொடுக்கப்படும் நிதிக்கு வரி செலுத்த வேண்டியதில்லை.
ஒருவர் சுயமாக கொடுக்கும் தொகையிலிருந்துதான் அவர் முதன் முதலாக வீடு வாங்கும்போது Superfund இலிருந்து பணம் எடுக்க முடியும். அவரை பணிக்கு அமர்த்தியவர் அவர் சார்பாக கொடுக்கும் பங்களிப்பு நிதியிலிருந்து எந்தப் பகுதியையும் எடுக்க முடியாது. இந்த மாற்றம் அடுத்த ஆண்டு (2022) ஜூலை மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து செயல்முறைக்கு வர முன்மொழியப்பட்டுள்ளது.
Federal Budget to include cash payments worth $500 for aged, family and disability welfare recipients. Source: Getty
67 முதல் 74 வயதுக்குட்பட்டவர்களுக்கு பணி சோதனை நீக்கம்
67லிருந்து 74 வயது உடையவரா நீங்கள்? அப்படியானாவர்களுக்கு work test என்பது தற்போதைய நடைமுறை. ஒரு நிதியாண்டில், தொடர்ச்சியாக 30 நாளில் குறைந்தது 40 மணி நேரம் வேலை செய்திருக்கிறீர்களா என்கிற பணி சோதனை இருக்கும். ஆனால் இப்பொழுது முன்மொழியப்பட்ட மாற்றங்களில், வருகிற அடுத்த ஆண்டு ஜூலை மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து அப்படிப்பட்ட பணி சோதனை இருக்காது. நீங்கள் Superfund க்கு நிதி வழங்கினால் மட்டுமே அப்படிப்பட்ட பணி சோதனை இருக்கும்.
Super Downsizer திட்டத்திற்கான வயது வரம்பு குறைகிறது
Super Downsizer திட்டத்திற்கான வயது வரம்பு 65லிருந்து 60ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஓய்வு - ரிட்டயர்டு ஆனவர்கள் தங்கள் பெரிய வீட்டை விற்பதன் மூலமாக 300,000 டாலர்களை Superfund க்கு அளிக்கலாம். தம்பதியராக இருந்தால் ஒவ்வொருவரும் 300,000 டாலர்களை அளிக்கலாம். ஆனால் அது அரசு வழங்கும் பென்சனுக்கான சொத்து மதிப்பீட்டில் சேர்க்கப்படும் என்பதையும் ஒருவர் மனதில் கொள்ள வேண்டும். ஆனால் ஒருவர் தங்கியிருக்கும் வீடு, பென்சன் பெற தகுதி பெறும் சொத்து மதிப்பீட்டிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கும் தற்போதைய நிலை அப்படியே நீடிக்கும்.
Retirement review. Source: SBS
மாற்றத்திற்கு வரவேற்பும் எதிர்ப்பும்
புதிதாக அறிமுகம் செய்யப்படும் மாற்றங்களில் சில மாற்றங்கள் குறித்து Industry Superfund நிறுவனங்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளன. Superfund நிறுவனங்களுக்கு டெஸ்ட் - சோதனை என்று குறிப்பிட்டோம் இல்லையா. அப்படிப்பட்ட சோதனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள சில Superfund நிறுவனங்கள் மோசமாக செயல்பட்டு வருபவை என Industry Super Australia விவாதிக்கிறது. அது மட்டுமல்ல, Superfund நிறுவனங்கள் இந்த சோதனையில் தோற்றுப் போனால் அவர்களிடம் சேவை பெறுவோர் மற்றொரு நன்கு செயல்படுகிற நிதிக்கு மாற்றவேண்டும் என்றும் வேண்டுகிறது.
காலத்தின் தேவைக்கேற்ப Superfund நிறுவனங்கள் செயல்படும் முறையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றே பலரும் கருதுகிறார்கள். வாழ்நாள் முழுக்க ஒரே சூப்பர் பண்டு நம்மை ஒட்டிக் கொண்டே வருவது வாழ்வை எளிதாக்கும் என்றும், Super fund-களை மதிப்பீடு செய்து தர வரிசைப்படுத்தும் போது, அவைகள் தங்கள் சேவையை இன்னும் சிறப்பாக செய்ய ஏதுவாக இருக்கும் என்றும் சிலர் எண்ணுகிறார்கள். அனைத்து பணியாளர்களுக்கும் Superfund-இல் இணைய வாய்ப்பு கொடுத்ததை பலர் வரவேற்கிறார்கள்.
Ref:
1. Lowrey, Tom. (2021, June 17). Superannuation changes have passed Parliament. Here’s what that means. ABC News. Retrieved from as on 18.06.2021.
2. What this year’s budget means for super and retirement. Federal Budget 2021. AustralianSuper. from Australian Institute of Superannuation Trustees (AIST) 2021 Federal Budget Summary. Retrieved from as on 20.06.2021
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.