தவறான தகவல்களை வழங்கி Superannuation பணத்தை முன்கூட்டியே பெற்றுக்கொண்டவர்களை கண்டுபிடிப்பதற்கான பரீட்சார்த்த விசாரணை நடவடிக்கையொன்று (pilot program) ஆரம்பித்துள்ளதாக ஆஸ்திரேலிய வரித்திணைக்களம் அறிவித்துள்ளது.
தவறான தகவல்களை வழங்கி மேற்படி நிதியைப்பெற்றுக்கொண்டவர்களிடம், குறித்த நிதிக்குரிய அதிக வீதத்துடனான வரியை செலுத்துமாறு கோருவதா அல்லது சுமார் 12 ஆயிரத்து 600 டொலர்கள்வரை அபராதத்தொகையை அறவிடுவதா என்பது குறித்து வரித்திணைக்களம் ஆலோசித்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலினால் நாட்டிலேற்பட்ட பொருளாதார தேக்கநிலையை அடுத்து, Superannuation பணத்தை முன்கூட்டியே பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பொன்றினை அரசு அறிவித்திருந்தது.
சுமார் 20 ஆயிரம் டொலர்கள் வரையிலான நிதியை இரண்டு பகுதிகளாக பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பினையும், இதைப் பெற்றுக்கொள்வதற்கு தகுதியுடையவர்கள் யார் என்ற விவரத்தையும் ஆஸ்திரேலிய கருவூலக்காப்பாளர் அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பின் பிரகாரம் விண்ணப்பித்த சுமார் 2.46 மில்லியன் பேர் தங்களது பணத்தை பெற்றுள்ளார்கள். இவர்களுக்குரிய சுமார் 32 பில்லியன் டொலர்களை அரசு திறைசேரியிலிருந்து விடுவித்திருந்தது.
இந்தத்தொகை எதிர்வரும் டிசெம்பரில் 42 பில்லியன் டொலர்களாக அதிகரிக்கும் என்று தற்போது கணிப்பிடப்படடுள்ளது.
இதேவேளை தவறான தகவல்களை வழங்கி நிதியைப்பெற்றுக்கொண்டவர்கள் என்று கருதப்படுபவர்களுக்கு வரித்திணைக்களம் ஏற்கனவே கடிதங்களை அனுப்பி விளக்கம் கோரிவருகிறது.
தவறான புரிதல் காரணமாக இந்த நிதியைப்பெற்றுக்கொள்ள விண்ணப்பித்து பணத்தைப்பெற்றுக்கொண்டவர்கள் தங்களது தவறினை ஒப்புக்கொண்டால் அவர்களுக்கு அபராதம் விதிப்பதா அல்லது பெற்றுக்கொண்ட நிதிக்கு அதிக வீதத்துடனான வரியை விதிப்பதா என்பவை தொடர்பாக வரித்திணைக்களம் தற்போது பரிசீலித்துவருவதாக வரித்திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார்.