வீட்டில் விளக்கேற்றி தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது வட இந்தியர்களின் வழக்கம் என்றால், பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடுவது தமிழர்களின் வழக்கம். தமிழகத்தில் பட்டாசு இல்லாத தீபாவளி கொண்டாட்டத்தை பார்க்கவே முடியாது. ஆஸ்திரேலியாவில் பட்டாசை தவிர மற்ற அனைத்து கொண்டாட்டங்களும் உண்டு.
"மெல்பனில் தீபாவளி கொண்டாட்டங்கள் பல ஆண்டுகளாக நிறைய விரிவடைந்திருந்தாலும், பட்டாசுகள் வெடிக்க முடியாமல் இருப்பது ஒரு பெரிய கவலைதான், " என்கிறார் மெல்பனை சேர்ந்த ஸ்ரீவட்சன்.
2008 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் தனது குடும்பத்துடன் கொண்டாடிய முதல் தீபாவளியை அமைதியான ஒன்றாக நினைவு கூருகிறார் ஸ்ரீவட்சன். ஆனால் புதிய குடியேற்றவாசிகள் வருகையுடன் கொண்டாட்டங்கள் மாறி வருகின்றன என்றும் கூறுகிறார்.
"கடந்த ஐந்து ஆண்டுகளாக, மெல்பனில் கொண்டாட்டங்கள் பிரம்மாண்டமாக உள்ளன. யாரா நதியின் மேல் , கிறிஸ்துமஸ் மற்றும் ஆஸ்திரேலிய தினத்திற்காக நீண்ட காலமாக வாணவேடிக்கைகள் நடந்து வருகின்றன, கடந்த சில வருடங்களாக, தீபாவளிக்கும் வாணவேடிக்கைகள் வானத்தை அலங்கரிக்கின்றன. ஆற்றை ஒட்டியுள்ள பல்வேறு ஸ்டால்கள் எங்களுக்கு சரியான தீபாவளி மனநிலையை வழங்குகின்றன, " என்று அவர் கூறுகிறார்.
தீபாவளியை, ஆஸ்திரேலிய பணியிடங்களில் கூட கொண்டாடத் தொடங்கிவிட்டதாக சொல்கிறார் ஸ்ரீவட்சன் .
Srivatsan Credit: SBS Tamil
ஒரு புதிய கொண்டாட்டம்
சுரேஷ் சம்பத் இருபது ஆண்டிற்கு மேலாக சிட்னியில் வசித்து வரும் ஒரு நிதி நிபுணராவார்.
தமிழநாட்டில் தீபாவளியன்று முதல் நாள் முதல் ஷோ பார்ப்பது தீபாவளி கொண்டாட்டங்களில் ஒன்று. அதுபோலவே தனது வீட்டில் முதல் நாள் முதல் ஷோ கொண்டாட்டத்தை முயற்சி செய்து பார்த்திருக்கிறார் சுரேஷ்.
"ஒரு முறை தீபாவளியன்று நண்பர்களை வீட்டிற்கு அழைத்து, ஆன்லைன் தளத்தில் வெளியான புது படத்தை ஒன்றுகூடி பார்த்து மகிழ்ந்தோம், " என்கிறார் சுரேஷ்.
Suresh Sampath with his family Credit: SBS Tamil
தமிழ்நாட்டில் உள்ள தனது மாமியார் வீட்டில் கடைப்பிடிப்பதைப் போலவே சிட்னியில் தீபாவளி நோன்பு கடைபிடிப்பது சவாலாக இருப்பதாகக் கூறுகிறார் பிரியா ஸ்ரீனிவாசன்.
"இங்கேயும் கூட, நாங்கள் சிறப்பு நோன்பு தட்டு (இனிப்புகள், சுவையான தின்பண்டங்கள், பூக்கள் மற்றும் பழங்கள் நிறைந்த ஒரு தட்டு) தயார் செய்கிறோம், வீட்டிலேயே அதிரசம் செய்து, கலசத்தை அலங்கரித்து, இவை அனைத்தையும் அருகிலுள்ள அம்மன் கோயிலுக்கு எடுத்துச் சென்று, அம்மனுக்கு பிரார்த்தனை செய்கிறோம், " ப்ரியா விளக்குகிறார்.
"நான் இந்தியாவுக்குச் செல்லும் போதெல்லாம் முன்னேற்பாடாக நோன்புக்கு தேவையான பொருட்களை வாங்கி வந்துவிடுவேன் . "
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் தனது முதல் தீபாவளியின் போது, அவர் வீட்டையும், அங்கு பண்டிகை கொண்டாடப்பட்ட விதத்தையும் நினைத்து கவலைப்பட்டதாக ப்ரியா கூறுகிறார்.
"ஆனால் ஆஸ்திரேலியாவில் தீபாவளியைக் கொண்டாடுவதற்கான வழிகளை இப்போது தெரிந்துகொண்டுவிட்டேன் . கடந்த சில ஆண்டுகளாக, தீபாவளியின் போது இனிப்புகள் மற்றும் சுவையான தின்பண்டங்களை நண்பர்களுடன் ஒன்றுகூடி வீட்டிலேயே தயார் செய்கிறோம். நாங்கள் எங்கள் குடும்பத்திற்காக ஒன்றாக சமைக்கும்போது சந்தோஷமாக இருக்கிறது."
தீபாவளி லேகியம்
ப்ரியாவுக்கு நோன்பு என்றால், சிட்னியை சேர்ந்த பத்மா ராஜனுக்கு தீபாவளி லேகியம் ஸ்பெஷல்.
மிளகு, சீரகம், ஓமம் விதைகள், மஞ்சள், வெல்லம், சித்தரத்தை, கந்து திப்பிலி, அரிசி திப்பிலி, கிராம்பு, இலவங்கப்பட்டை மற்றும் இஞ்சி ஆகியவை லேகியம் செய்ய முக்கிய பொருட்கள் ஆகும்.
பத்மா ஆஸ்திரேலியாவிற்கு 1992இல் வந்தபோது தீபாவளி லேகியத்திற்கான அனைத்து பொருட்களும் கிடைக்கவில்லை என்று கூறுகிறார்.
ஆஸ்திரேலியாவில் வழக்கத்திற்கு மாறான அமைதியான தீபாவளிக்கு பழகிக்கொள்ள சில ஆண்டுகள் ஆனது என்று அவர் கூறுகிறார்.
"அந்த காலக்கட்டத்தில் இந்தியர்கள் யாரும் இல்லாததால், ஆஸ்திரேலியாவில் எனது முதல் தீபாவளி அன்று நான் கொஞ்சம் தனிமையாக உணர்ந்தேன்" என்று பத்மா நினைவு கூறுகிறார் .
"புதிய குடியேற்றவாசிகள் வரத் தொடங்கிய சில ஆண்டுகளில் , அதிக தீபாவளிக் கண்காட்சிகள் தோன்றின, இந்திய சாமான்கள் மிகவும் அணுகக்கூடியதாக மாறின, கடந்த சில ஆண்டுகளாக நாங்கள் உண்மையில் இங்கே பண்டிகையை குதூகலமாகக் கொண்டாடமுடிகிறது ."
தீபாவளி நிகழ்ச்சிகளின் முக்கியத்துவங்கள்
வினித்ரா ஜெயராமன் பல ஆண்டுகளாக சிட்னியில் தீபாவளி கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
சிட்னியில் உள்ள தமிழ் சமூகம் இந்த நிகழ்விற்காக மூன்று மாதங்களுக்கு முன்பே தயாராகிறது என்று அவர் கூறுகிறார்.
Vinithra Jayaraman at a Deepavali program Credit: SBS Tamil
" பாரம்பரிய ஆடைகளை அணிந்து , சுவையான உணவுகளை சாப்பிட்டு, தமிழர்கள் ஒன்றுகூட , இந்நிகழ்ச்சிகள் ஒரு சரியான வாய்ப்பை அளிக்கிறது ."
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது