Warning: Distressing Content
எச்சரிக்கை: மனதிற்குக் கவலை தரும் தகவல்களை உள்ளடக்கியது இந்தப் பதிவு
தற்காலிக வீசாவில் ஆஸ்திரேலியாவிலுள்ள பெண்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்யும் இடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர்.
அந்தப் பெண்களில் 25 சதவீதமானவர்கள் மட்டுமே தமக்கு நடந்த கொடுமைகள் குறித்துப் புகாரளித்துள்ளனர் என்று Unions NSW நடத்திய சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்த விடயத்தில், கட்டுமானம், விருந்தோம்பல், தோட்டக்கலை, துப்புரவு மற்றும் சில்லறை விற்பனை ஆகியவை மிகவும் பாதுகாப்பற்ற தொழில் துறைகள் என அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும், இதில் பொதுவாகக் குற்றம் இழைப்பவர்கள் முதலாளிகள் மற்றும் மேலாளர்கள் என்று இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.
கொடுமைப்படுத்துதல், ஊதியக் குறைப்பு, நாடு கடத்தப்படும் அல்லது வேலையிலிருந்து நீக்கப்படுதல் போன்ற அச்சுறுத்தல் நடவடிக்கைகளால் புகாரளித்த பெண்கள் தண்டிக்கப்பட்டனர்.
வேலை இல்லாமல் இருப்பது தங்கள் பாதுகாப்புக்கு மேலதிக அச்சுறுத்தலாக இருப்பதாக புலம்பெயர்ந்த மற்றும் அகதிப் பெண்கள் கூறியதாக அந்தப் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை ஆய்வு செய்த மெல்பன் பல்கலைக்கழக பேராசிரியர் மரீ செக்ரேவ் (Marie Segrave) கூறினார்.
நிதி நிலைமையில் பாதிப்பு, அல்லது வசிப்பிடத்தை இழக்க நேரிடும் என்ற அச்சம் காரணமாக பல பெண்கள் தங்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் குறித்துப் புகாரளிப்பதற்குப் பதிலாக அவற்றை “சமாளிக்க” வேண்டிய நிலையில் உள்ளார்கள்.
மாநில அரசுகள் மற்றும் ஆஸ்திரேலிய அரசு, ஆஸ்திரேலியா மனித உரிமைகள் ஆணையத்துடன் இணைந்து, பெண்களை வேலையில் பாதுகாப்பாக வைத்திருக்கும் சட்டத்தை செயல்படுத்தி வரும் நிலையில், சீர்திருத்தம் என்பது தீர்வின் ஒரு பகுதி மட்டுமே என்று பேராசிரியர் செக்ரேவ் கூறினார்.
“இதுபோன்ற சூழ்நிலையிலுள்ள பெண்களின் பாதுகாப்பு குறித்த வழிகளை நாம் ஆராயும் போது, பல்வேறு பெண்களின் அனுபவங்கள், மிகவும் சிக்கலான பிரச்சனைகளை ஆராய்ந்து, பெண்களை ஆதரிப்பதற்கும் பாதுகாப்பை உருவாக்குவதற்கும் வெவ்வேறு வழிகளை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.”
நீங்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவர் பாலியல் துன்புறுத்தல் அல்லது தாக்குதலால் பாதிக்கப்பட்டிருந்தால் 1800RESPECT ஐ அழைக்கவும் அல்லது 1800RESPECT.org.au ஐப் பார்வையிடவும். அவசர நிலைமை என்றால் 000ஐ அழைக்கவும்.