கால்நடையாக சென்றாலும் சாலை விதிகளை ஏன் கடைப்பிடிக்க வேண்டும்?

Pedestrian crossing warning sign

Pedestrian safety is about using common sense, but we can’t rely on this alone. Source: Moment RF / Simon McGill/Getty Images

நாடு முழுவதும், ஒவ்வொரு நாளும், கால்நடையாக செல்பவர்களும் தங்களை அறியாமல் சட்டத்தை மீறுகிறார்கள். இதற்கு அபராதம் கட்ட வேண்டி வருவது ஒரு புறம் இருக்க, சில நேரங்களில் விபத்துகள் ஏற்படுவதற்கும் வழி வகுக்கலாம். கால்நடை செல்லும் போது கடைப்பிடிக்க வேண்டிய சட்டங்கள் சிலவற்றைப் பற்றி அறிந்து கொள்வதன் மூலம் பாதுகாப்பாக இருக்கலாம், அத்துடன் எதிர்பாராத அபராதத்தைத் தவிர்க்கலாம்.


கால்நடை செல்லும் போது பாதுகாப்பாக இருப்பதற்கு பொது அறிவைப் பயன்படுத்தினால் போதாது, நாட்டின் சாலை சட்டங்களையும் அறிந்திருந்தால்தான் தெருக்களையும் பாதைகளையும் மற்றவர்களுடன் நாம் பாதுகாப்பாகப் பகிர்ந்து கொள்ளலாம்.


இது குறித்து Melissa Compagnoni ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தைத் தமிழில் எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.






மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் முழுவதும் பொதுவான கொள்கைகளால் சட்டம் மற்றும் விதிகள் வழி நடத்தப்படுகின்றன. இருந்தாலும், அதிகார வரம்புகளுக்கு இடையில் இவற்றில் சிறிய வேறுபாடுகள் உள்ளன.

சிலருக்கு இந்தச் சட்டங்கள் கடுமையானதாகத் தோன்றலாம், ஆனால் கால்நடையாக செல்பவர்கள்தான் சாலைப் பயனாளர்களில் எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்கள் என்று NRMA சாலைப் பாதுகாப்பு நிபுணர் Dimitra Vlahomitros கூறுகிறார்.

“வயதில் மிகவும் சிறியவர்கள், அல்லது அதிக வயதானவர்கள் மற்றும் போதையில் இருப்பவர்கள் சாலைகளில் மிகவும் பாதிக்கப்படக் கூடியவர்கள் எங்கள் என்பதை நாங்கள் அறிவோம்” என்கிறார் அவர்.
country road with speed hump sign
In the absence of traffic lights, look for a designated ‘zebra crossing’ Source: iStockphoto / Veronica Todaro/Getty Images/iStockphoto

கால்நடையில் செல்பவர் என்று யாரை சொல்கிறோம்?

வியக்கத்தக்க வகையில், கால்நடையில் செல்பவர் என சட்ட வரையறையில் அடையாளம் காணப்படுபவர் பல வகையானவர்கள்.

“ஆஸ்திரேலியாவில், கால்நடையில் செல்பவர் என அடையாளம் காணப்படுபவர்கள் நடை பாதையில் அல்லது தெருவில் நடந்து செல்பவர்கள் மட்டுமல்ல” என்று RACV இன் கொள்கை வகுப்பாளர்களின் தலைவர் James Williams விளக்குகிறார்.
மிதிவண்டியைத் தள்ளிக் கொண்டு செல்பவர், அல்லது ஸ்கேட்போர்டு (skateboard), ரோலர் ஸ்கேட்கள் (roller skates), ரோலர் பிளேடுகள் (rollerblades), அல்லது சக்கர நாற்காலிகள் மற்றும் மொபிலிட்டி ஸ்கூட்டர் (mobility scooters) போன்ற சக்கர சாதனங்களைப் பயன்படுத்துபவர்கள் அனைவரும் கால்நடையில் செல்பவர் என அடையாளம் காணப்படுபவர்கள்.
James Williams, Head of Policy, RACV

சாலையைக் கடக்கும் போது காவல்துறையிடம் அகப்படுவது

நமது சாலைகளை முடிந்த வரை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு, கால்நடையில் செல்பவர்கள் போக்குவரத்து விளக்குகளை மதித்து நடப்பதும் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு விளக்குகளுக்குக் கீழ்ப்படிவதும் அவசியம்.

ஒருவர் நடப்பது போன்ற பச்சை விளக்கு ஒளிரும் போது சாலைக்குக் குறுக்காக நடக்கவும். சிவப்பு அல்லது வெட்டொளி (flashing) ஒளிரும் போது சாலையைக் கடக்கத் தொடங்க வேண்டாம்.

இந்த விதியை மீறி சாலையைக் கடப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம். இதனை பொதுவாக ஜேவாக்கிங் (jaywalking) என்று குறிப்பிடப்படுகிறது, ஆனால் அது ஆஸ்திரேலியாவில் சட்ட பூர்வமான ஒரு சொல் அல்ல.

“இது அமெரிக்கர்கள் அதிகம் பயன்படுத்தும் சொல்” என்று Pedestrian Council of Australia என்ற அமைப்பின் நிறுவனர் Harold Scruby கூறுகிறார்.

“ஆஸ்திரேலியாவில் கால்நடையில் செல்பவர்கள் எந்த சாலையையும், எந்த நேரத்திலும் கவனமாகக் கடக்க முடியும். அதற்கான விதி மிகவும் தெளிவாக உள்ளது. ஆனால், ஒருவர் சாலையைக் கடக்கும் இடத்திலிருந்து 20 மீட்டர் தூரத்திற்குள் சாலை கடக்கும் இடம் இருக்கக்கூடாது, அல்லது சாலை கடக்கும் இடத்தில் சிவப்பு விளக்கு அல்லது வெட்டொளி ஒளிரக் கூடாது” என்கிறார் அவர்.

NSW மாநிலத்தில் நீங்கள் ஒளிரும் சிவப்பு விளக்கு அல்லது வெட்டொளியின் போது சாலையைக் கடக்க ஆரம்பித்தால் கூட அபராதம் விதிக்கப்படலாம்.
Crowd of people walking across zebra, top view
It’s an offence to walk without reasonable consideration of other road users. Credit: vm/Getty Images

சாலையை எங்கே கடப்பது?

போக்குவரத்து விளக்குகள் இல்லாத இடங்களில், வெள்ளைக் கோடுகள் வரையப்பட்ட ஒரு பகுதி சாலையில் இருக்கிறதா என்று பார்க்கவும். வரிக் குதிரையின் முதுகில் உள்ள கோடுகள் போல இவை வரையப்பட்டுள்ளமையால் அவற்றை ‘zebra crossing’ என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். கால்நடையாக செல்லும் ஒருவர் இந்த இடங்களில் சாலையைக் கடக்க விரும்பினால் சாலையில் செல்லும் வாகனங்கள் வழிவிட வேண்டும்.

சில சமயங்களில் இந்த இடங்கள் சாலையை விட சற்று உயரமாக அமைக்கப்பட்டிருக்கும். அதனை நகைச்சுவையாக ‘wombat crossing’ என்று அழைப்பார்கள்.

இது கால்நடையாக செல்பவர்கள் சாலைகளுக்குக் குறுக்காக நடப்பதற்காக அமைக்கப்பட்டவையா அல்லது வாகனங்கள் அந்த சாலையில் ஓடும் வேகத்தைக் குறைப்பதற்காக அமைக்கப்பட்டவையா என்று அடிக்கடி குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

சாலையைக் கடப்பதற்கு என்று அமைக்கப்பட்ட இடங்களை அடையாளம் காண இலகுவான இரண்டு வழிகள் உள்ளன - சாலையோரத்தில் ஒருவரின் இரண்டு கால்கள் கொண்ட காட்சிக் குறிப்பு வைக்கப் பட்டிருக்கலாம் அல்லது சாலையோரத்திலிருந்து சாலையைக் கடக்கும் இடத்திற்கு வழி அமைக்கப் பட்டிருக்கலாம் – இவற்றை வைத்து அந்த இடம் தூரத்திற்குள் சாலை கடக்கும் இடம் என்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

வேகத் தடையின் குறுக்கே நடப்பதைத் தடுக்கும் வேலிகள் இருந்தால் அல்லது ‘இங்கே கடக்க வேண்டாம்' என்ற அறிவுறுத்தல் பலகை இருந்தால் நீங்கள் கண்டிப்பாக அந்த இடத்தில் சாலையைக் கடக்கக் கூடாது.

ஒரு வேகத் தடை இருக்குமிடத்தில் வரிக்குதிரை கடக்கும் கோடுகள் இருப்பதில்லை, அதற்கு பதிலாக சாலையோரத்தில் இருபுறமும் சீரற்ற கறுப்பு வெள்ளை அடையாளங்கள் இருக்கும்.

சாலையை பாதுகாப்பாக கடப்பது எப்படி

அருகில் சாலை கடக்கும் இடம் இல்லை என்றால், கால்நடையாக செல்பவர்கள் சாலையின் குறுக்கே குறுகிய மற்றும் நேரடியான பாதையில் செல்வது முக்கியம். “அதாவது, நேராக சாலைக்குக் குறுக்கே நடக்க வேண்டும், ஒரு கோணத்தில் அல்ல,” என்று James Williams கூறுகிறார்.

“கூடுதலாக, மக்கள் பொதுவாக அறியாதது என்னவென்றால், ஒருவர் சாலையைக் கடக்கும் போது, நகரும் வாகனத்தின் பாதையில் செல்வது சட்டத்திற்கு எதிரானது, ஏனெனில் அது நிச்சயமாக ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்” என்று அவர் மேலும் கூறினார்.

Pedestrians cross a busy intersection in the city
Drivers must give way to pedestrians when entering or leaving a driveway, when using shared zones and at pedestrian crossings. Source: Moment RF / Diane Keough/Getty Images

சாலையில் நடக்க முடியுமா?

தெருவில் நடந்தால் அபராதம் விதிக்கப்படலாம் என்பதைக் கேள்விப்பட்டால் நீங்கள் ஆச்சரியப்படக் கூடும்.

சாலையைப் பயன்படுத்தும் மற்றவர்களை நியாயமான முறையில் கருத்தில் கொள்ளாமல் நடப்பது குற்றமாகும். பெரும்பாலான அதிகார வரம்புகளில், அருகில் நடைபாதை அல்லது இயற்கைப் பகுதி இருக்கும்போது சாலையில் நடப்பது குற்றமாகும்.

நடைபாதையோ, இயற்கைப் பாதையோ இல்லாவிட்டால், கால்நடையாக செல்பவர்கள் சாலையைப் பயன்படுத்தலாம்.

“இருப்பினும், நீங்கள் போக்குவரத்தை எதிர்கொண்டு நடக்க RACV பரிந்துரைக்கிறது,” என்று James Williams கூறுகிறார்.

“வாகனங்கள் ஓடும் திசைக்கு எதிர்த்திசையில் நீங்கள் போக்குவரத்தை நோக்கி நடப்பது பாதுகாப்பானது” என்கிறார் அவர்

கால்நடையாக செல்பவர்களுக்கு சாலைகளில் உரிமை இருக்கிறது


வாகன ஓட்டுனர்கள் ஒரு வீட்டிலிருந்து ஓட்டுப் பாதையில் வெளியேறும் போதும் நுழையும் போதும் கால்நடை செல்பவர்களுடன் பகிரப்பட்ட இடங்களைப் பயன்படுத்தும் போதும் மற்றும் சாலை கடக்கும் இடங்களிலும் வாகன ஓட்டுனர்கள் கால்நடை செல்பவர்களுக்கு வழி விட வேண்டும்.
Kid crossing the street at a pedestrian crossing and listening to music on his cellphone
Smart phones have bred a population of pedestrians who show disregard for traffic and the impending danger. Credit: Dobrila Vignjevic/Getty Images

குற்றப் பணம்

நீங்கள் வசிக்கும் இடத்திற்கு ஏற்ப தண்டனைகள் மாறுபடலாம்.

உதாரணமாக, விக்டோரிய மாநிலத்தில், போக்குவரத்து விளக்குகளுக்குக் கீழ்ப்படியத் தவறியதற்காக, சாலை கடக்கும் இடத்திலிருந்து 20 மீட்டருக்குள் சாலையைக் கடப்பதற்காக அல்லது சாலையில் நடப்பதற்காக $96 அபராதம் விதிக்கப்படுகிறது.

“ஒரு காவல்துறை அதிகாரியின் போக்குவரத்து வழிகாட்டுதலுக்குக் கீழ்ப்படியத் தவறினால் $385 அபராதம் விதிக்கப்படுகிறது” என்று James Williams எச்சரிக்கிறார்.

கால்நடை செல்பவர்கள் கவனிக்க வேண்டியவை

நடை பாதையில் இடது பக்கமாக நடக்காமல் வலது பக்கமாக நடப்பது அல்லது தொலைபேசியில் பேசிக் கொண்டு சுற்றிவர என்ன நடக்கிறது என்பதை அறியாமல் நடப்பது போன்றவற்றுக்கு குற்றப் பணம் அறவிடப்பட மாட்டாது என்றாலும் மற்றவர்களும் சாலைகளை இடையூறு இல்லாமல் பயன்படுத்த சில நடைமுறைகள் உதவுகின்றன.

சாலை பாதுகாப்பு என்பது சில நேரங்களில் சாலையில் நடக்கும் மற்றவர்களுக்கு மரியாதை கொடுத்து நடப்பதால் வருகிறது.

தூக்கத்தில் நடப்பவர்கள் போன்ற கால்நடை செல்பவர்கள்

போக்குவரத்து மற்றும் வரவிருக்கும் ஆபத்தை அலட்சியப் படுத்தும் கால்நடை செல்பவர்களின் எண்ணிக்கையை கையடக்க தொலைபேசிகள் (mobile phones) உருவாக்கியுள்ளன.
'Pedestrian zombies' என்று அறியப்பட்ட இவர்கள் தூக்கத்தில் நடப்பவர்கள் போன்று கால்நடை செல்பவர்கள். உலகம் முழுவதும் இவர்களது எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல சாலை விபத்துகள் ஏற்படுத்துவதற்கு இவர்கள் காரணமாக உள்ளனர்.
Harold Scruby, CEO, Pedestrian Council of Australia
கவனச்சிதறலுடன் சாலையைக் கடப்பது தொடர்பான தற்போதைய சட்டங்கள் அரிதாகவே நடைமுறைப்படுத்தப் படுகின்றன.

இப்படி நடப்பவர்களது நடத்தையை மாற்றி, உயிரைக் காப்பாற்றும் நோக்கத்துடன், கவனத்தை சிதறடித்துக்கொண்டு சாலையைக் கடப்பதைக் குற்றமாக்கும் தேசியச் சட்டத்தை அறிமுகப்படுத்த The Pedestrian Council of Australia விரும்புகிறது.

“ஒருவர் சாலையைக் கடக்கும் போது அவரது கவனத்தைத் திசை திருப்பும் எந்தவொரு கையடக்க சாதனத்தையும் அவர் பயன்படுத்துகிறார் என்றால், அவருக்கு $200 தண்டனைப் பணம் விதிக்கப்படுவதை நாங்கள் விரும்புகிறோம்” என்று Harold Scruby கூறுகிறார்.

கால்நடை செல்பவர்களுக்கான உங்கள் மாநில அல்லது பிராந்திய சட்டங்கள் என்ன என்று அறிய இணையத் தளத்தைப் ( ) பார்வையிடவும்.

Share