முக்கிய புள்ளிகள்
- பூர்வீகக் குடி மக்களுக்கு, ஆரோக்கியம் என்பது உடல், உணர்ச்சி, சமூக மற்றும் ஆன்மீக நல வாழ்வின் சிக்கலான தொடர்புகள் அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான பொருளாகும்.
- பாரம்பரிய மருத்துவம் என்பது மருந்து மற்றும் ஆன்மீகத்தின் கலவையாகும்.
- பாரம்பரிய மருத்துவர்கள் தலைமுறை தலைமுறையாக தங்கள் அறிவு மற்றும் குணப்படுத்தும் திறன்களை பெறுகிறார்கள்.
- பாரம்பரிய மருத்துவம் மற்றும் நவீன மருத்துவம் இரண்டும் கைகோர்த்துச் செயல்படுவதோடு, பலருக்கு கலாச்சார ரீதியாக ஏற்றுக் கொள்ளப் படக்கூடிய சிகிச்சையை வழங்க முடியும்.
பூர்வீகக் குடி மக்களுக்கு, ஆரோக்கியம் என்பது நோயற்ற வாழ்வு என்பது மட்டுமல்ல. உடல், உணர்ச்சி, சமூக மற்றும் ஆன்மீக நல வாழ்வின் சிக்கலான தொடர்புகள் அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான கருத்தாகும்.
ஆகையால், பூர்வீகக் குடி மக்களின் பாரம்பரிய மருத்துவம் உடல் நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் மட்டும் கவனம் செலுத்துவதில்லை. நல்வாழ்வின் பல்வேறு பரிமாணங்களுக்கிடையில் சமநிலையை பேண முயல்கிறது.
தற்போது Tasmania என்று அழைக்கப்படும் lutruwitaவின் வடகிழக்கு கடற்கரையைச் சேர்ந்த Truwulway தேசத்துப் பெண் மருத்துவர் Dr Alana Gall, இளம் வயதிலிருந்தே பாரம்பரிய மருத்துவத்தில் ஆர்வம் கொண்டவர்.
"நாங்கள் வாழ்ந்த இடத்தில் எப்பொழுதும் வெவ்வேறு இயற்கை மருந்துகள் மற்றும் விதம் விதமான நடைமுறைகளைப் பயன்படுத்துவோம்; வெவ்வேறு சடங்குகள் மற்றும் ஆன்மீகம் அனைத்தும் என் வாழ்க்கையின் பெரிய பகுதியாகும்."
Dr Alana Gall
"bush medicine" என்ற சொல், பாரம்பரிய மருத்துவம் என்ற சொல்லுடன் மாறி மாறிப் பயன்படுத்தப்படுவதால் பாரம்பரிய மருத்துவம் என்றால் என்ன என்பதைப் பற்றிய மக்களின் புரிதல் தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது என்று அவர் கூறுகிறார்.
உள்ளிழுக்கப்படும், உடல் மேல் பூசப்படும் அல்லது உடலுள் உட்கொள்ளப்படும் மருந்துகள் போன்ற உடல் சார்ந்த ஒன்று என பலர் நினைக்கின்றனர்.
இருந்தாலும், “எங்கள் மருந்து அதை விட அதிகமானவை,” என்று அவர் விளக்குகிறார்.
“குணப்படுத்தும் சடங்குகள், ஆன்மீக மருத்துவம் மற்றும் பாரம்பரிய குணப்படுத்துபவர்களை உள்ளடக்கியது பாரம்பரிய மருத்துவம்.”
நமது நாட்டை, நமது நிலங்களை, நாம் குணப்படுத்துபவர்களாகவும் பார்க்கிறோம். எனவே எமக்கும் நாடு மருந்தாக அமையலாம். அதற்கெல்லாம் அடிகோலுவது, மக்கள் இப்போது பொதுவாகக் குறிப்பிடும், பூர்வீகக் குடி மக்களின் வாழ்க்கை முறைகள் - பேசுவது, அறிவது, இருப்பது மற்றும் செய்வது போன்ற நமது வழிகள்.Dr Alana Gall
பாரம்பரிய மருத்துவர்கள்
தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள Aṉangu Pitjantjatjara Yankunytjatjara (சுருக்கமாக APY) நிலத்தில் உள்ள Pipalyatjara தேசத்தைச் சேர்ந்த ngangkari பெண்ணான Debbie Watson, ஒரு பூர்வீகக் குடி பாரம்பரிய மருத்துவராவார்.
Ngangkari மருத்துவர்கள் ஆவியை மறுசீரமைக்க உதவுகிறார்கள். அவர்கள் ஆவியை, மனித உடலின் முக்கிய அங்கமாக பார்க்கிறார்கள்.
“நான் மக்களை என் கைகளால் குணப்படுத்துகிறேன், நான் உள்ளே பார்க்கிறேன், அவர்களின் ஆற்றலையும், அவர்கள் உள்ளே இருப்பதையும் உணர்கிறேன், மேலும் நான் ஆவியுடன் வேலை செய்கிறேன்.”
ஆவி இடம்பெயர்ந்தால் அல்லது தடுக்கப்பட்டால், அது வலி, பதட்டம் மற்றும் பிற அறிகுறிகளை ஏற்படுத்தும் என்று Debbie Watson விளக்குகிறார்.
“ஆன்மாவைக் காயப்படுத்த முடியாது,” என்று அவர் கூறுகிறார்.
மக்களை குணப்படுத்தும் திறன் ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு சொல்லிக் கொடுக்கப்படுகிறது.
குணப்படுத்துபவர்களின் நீண்ட பரம்பரையில் இருந்து வந்தவர் Debbie Watson. தனது சிறுவயதில் அவரது தந்தையிடம் பயிற்சி எடுத்துக் கொண்டார்.
“அவர் என்னை ஒரு மருத்துவராக, குணப்படுத்துபவராக, வலிமையான குணப்படுத்துபவராக எனக்குக் கற்றுக் கொடுத்தார்.”
Debbie Watson
இலாப நோக்கற்ற இந்த அமைப்பு, பூர்வீகக் குடி பின்னணி கொண்டவர்களுக்கும் அல்லாதவர்களுக்கும் சிகிச்சை அளிக்கும் போது பல நூற்றாண்டுகள் பழமையான நடை முறையைத் தொடர்கிறது மற்றும் பராமரிக்கிறது.
ANTAC இன் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி Dr Francesca Panzironi சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தில் பயிற்சி பெற்றவர்.
பூர்வீகக் குடி மக்களின் பாரம்பரிய மருத்துவம் மேல் இந்த இத்தாலியப் பெண்ணிற்கு இருந்த ஆர்வம், மற்றும் அது குறித்து நூல் வடிவில் எதையும் தேட முடியாத நிலையில் அவர் இதனுள் மூழ்குவதற்கு வழிவகுத்தது.
தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ngangkari மக்களுடன் தொடர்பு கொண்டு அந்த சமூகத்துடன் கலந்தாலோசித்த பின்னர், இத்தகைய அவர்களுடைய சேவைகள் மிகவும் எளிதாக மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டியதன் அவசியத்தை Dr Francesca Panzironi உணர்ந்தார்.
From left, Dr Francesca Panzironi and Debbie Watson
மக்களுக்கு இது மிகவும் பயனுள்ளது, வெறும் கோட்பாடு அல்ல. இந்த மருத்துவத்தால் மக்கள் குணமடைகிறார்கள்.Dr Francesca Panzironi
பாரம்பரிய சிகிச்சை முறைகள் பொதுமக்களுக்குக் கிடைக்க இப்போது ANTAC வழி செய்கிறது. சுகாதார சேவைகள், சீர்திருத்தச் சேவைகள் மற்றும் அதைக் கற்றுக் கொள்வதில் ஆர்வமுள்ள பிற நிறுவனங்கள் அனைத்திற்கும் ANTAC பயிற்சி வழங்குகிறது.
பாரம்பரிய சிகிச்சை, உயிரியல் மருத்துவ சிகிச்சையை மாற்றவில்லை என்றாலும், “இரண்டும் கை கோர்த்து செயல்பட முடியும்” மற்றும் மக்களின் பிரச்சனைகளுக்கு கலாச்சார ரீதியான உணர் திறன் வாய்ந்த சிகிச்சையை வழங்க முடியும் என்று Dr Francesca Panzironi.
“இரண்டும் கை கோர்த்து வேலை செய்ய முடியும்”
Bungoree மற்றும் Matora மக்களின் வழித்தோன்றலில் வந்த Brett Rowling ஒரு பகுப்பாய்வு வேதியியலாளர் ஆவார்.
பாரம்பரிய மருத்துவம் மற்றும் நவீன மருத்துவம், வெளித் தோற்றத்தில் எதிரெதிராக இருந்தாலும், இரண்டு வெவ்வேறு, தனித்துவமான பார்வைகளை அனுமதிக்கும்; ஒன்றையொன்று பூர்த்தி செய்ய முடியும் என்று அவர் கூறுகிறார்.
ஒன்று, இது நமது வாய்வழிக் கதை, போதனைகள் மற்றும் இரகசியங்களைக் கொண்ட ஒழுக்கம், மறுபக்கம் வெள்ளையர் வேலை செய்யும் முறைகள், தரவு மற்றும் பகுப்பாய்வு. அவை இரண்டு துருவ எதிர் நிலைகள், ஆனால் இரண்டும் உடனிருந்து முழுமையாக்கும் நிரப்பு வழிகள்.]]Brett Rowling
எடுத்துக்காட்டாக, தலைவலி மாத்திரை paracetamol, நவீன அறிவியலின் தரவு மற்றும் பகுப்பாய்வை அடிப்படையாகக் கொண்டது, ஆனால் ஒரு வாய்வழி கதையாக சந்ததி சந்ததியாகப் பரிமாறப்பட்ட பாரம்பரிய மருத்துவமும், அதே பிரச்சினைக்குத் திறம்பட செயல்படும். ஒரு தீர்வுக்கு இரண்டு வேறுபட்ட அணுகுமுறைகள்.
Brett Rowling
“அவற்றிற்குப் புத்துயிர் கொடுத்து, மக்களுக்கும் உலகிற்கும் காட்ட வேண்டிய நேரம் இது” என்கிறார் Brett Rowling.
இந்த அறிவினால் உலகம் பல நன்மைகளைப் பெற முடியும் என்கிறார் Dr Alana Gall.
“ஆஸ்திரேலியாவில், இந்தக் கிரகத்தில், பழமையான தொடர்ச்சியான கலாச்சாரத்தைக் கொண்டவர்கள் நாங்கள். ஆகவே, இந்தப் பூமியை எப்படிப் பராமரிப்பது, மருத்துவம் செய்வது எப்படி என்பது பற்றிய ஞானங்கள் எங்களிடம் உள்ளன.
அந்த அறிவை நாம் பயன்படுத்தினால், நோய்க்கொல்லிகளை எதிர்க்கும் நுண்ணுயிர்கள் போன்ற இன்றைய பிரச்சனைகளில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று Dr Alana Gall விளக்குகிறார்.
பாரம்பரிய மருந்துகளின் பாதுகாப்பை சரிபார்க்க தேவையான தரவு மற்றும் பகுப்பாய்வுகளை நவீன விஞ்ஞானம் வழங்க முடியும்.
அறிவைப் பாதுகாத்தல்
இருப்பினும், இந்த அறிவுக்கு சரியான பாதுகாப்பு இல்லாமல், சில பூர்வீக குடி சமூகங்கள் தங்கள் அறிவைப் பகிர்ந்து கொள்ள தயங்குகின்றன, மேலும் சில சூழ்நிலையில், அந்த அறிவைக் கொண்டுள்ள பெரியவர்கள் இறக்கும் போது அந்த அறிவை அவர்களுடன் எடுத்துச் செல்கிறார்கள் என்கிறார் Dr Alana Gall.
“எங்கள் அறிவு பாதுகாக்கப்படவில்லை என்பதே உண்மை. அதாவது அந்த அறிவை நாம் சுதந்திரமாக வெளியிடுவது பாதுகாப்பானது அல்ல.
மருந்துப் பொருட்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் தயாரிப்பவர்கள் மற்றும் விவசாய நிறுவனங்கள் அந்த அறிவைப் பறித்து, வணிக மயமாக்கி கணிசமாக இலாபம் ஈட்டலாம் என்கிறார் அவர்.
இதன் விளைவாக, இந்த அறிவை வைத்திருப்பவர்களால் அவற்றை அணுகவும் பயனடையவும் முடியாமல் போகலாம், இது நிலைத் தன்மை பற்றிய கவலைகளையும் எழுப்புகிறது, என்று அவர் மேலும் கூறுகிறார்.
இந்த உலகில் வாழும் அனைத்து மக்களும் ஆரோக்கியத்திற்காகவும் நலனுக்காகவும் இந்த அறிவைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் ஒரு கட்டமைப்பை உருவாக்குவதே Dr Alana Gall அவர்களின் நீண்ட கால இலக்கு.