கோவிட் பரவலின்போது ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள ஊழியர்கள் மற்றும் வணிகங்கள், தாங்கள் பணிபுரியும் முறையை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
வாழ்க்கையின் பல அம்சங்கள் இப்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ள நிலையில், hybrid வேலை ஏற்பாடுகள் பல தொழில்களில் பொதுவானதாகிவிட்டன. ஊழியர்கள் பெரும்பாலும் வீட்டிலிருந்து வேலை செய்கிறார்கள்.
அதேநேரம் முழுநேர ஊழியர்கள் வேலை செய்யக்கூடிய மணிநேரங்களில் நெகிழ்வுத்தன்மையை அறிமுகப்படுத்துவதன் மூலம், சில வணிகங்கள் ஒரு படி மேலே செல்கின்றன.
அந்தவகையில் நியூசிலாந்தில் 18 மாத பரீட்சார்த்த முயற்சியை வெற்றிகரமாக மேற்கொண்டதைத் தொடர்ந்து, பிரபல நிறுவனமான Unilever ANZ, அதன் ஆஸ்திரேலிய ஊழியர்கள் மத்தியில் நான்கு நாள் வேலை வாரத்தை சோதனை செய்வதாக அறிவித்துள்ளது.
இதன்கீழ் ஊழியர்கள் தாங்கள் வேலை செய்யாத நாளைத் தேர்வு செய்ய முடியும், அல்லது வாரம் முழுவதும் குறைக்கப்பட்ட நேரத்தில் பணிபுரிய முடியும்.
அதேபோன்று தொழிலாளர்கள் தங்கள் நான்கு நாட்களை வீட்டிலிருந்து வேலை செய்வதற்கும் அலுவலகத்திற்கும் இடையில் பிரிக்க முடியும்.
நான்கு நாள் வேலை என்பதன் அர்த்தம், ஊதியம் குறையாமல், வேலை செய்யும் நேரத்தைக் குறைப்பதாகும்.
இந்நிலையில் நவம்பர் 14, 2022 இல் தொடங்கும் பரீட்சார்த்த முயற்சி முதலில் 12 மாதங்களுக்கு மேற்கொள்ளப்படும் எனவும், 80% நேரம் வேலை செய்து 100% வணிகப் பலன்களை வழங்குவதே இதன் நோக்கம் எனவும் Unilever ANZ தெரிவித்துள்ளது.
நான்கு நாள் வேலை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சுயாதீன ஆய்வொன்று, பணியாளர்களின் வேலை நேரத்தைக் குறைப்பது உற்பத்தித்திறனை மேம்படுத்துவதோடு தனிநபர்களுக்கும் வணிகங்களுக்கும் பயனளிப்பதாக தெரிவித்திருந்தது.
முழுநேர ஊழியர்களுக்கு வாரத்தில் கூடுதல் விடுமுறையை வழங்கும் நோக்கில், நாளொன்றுக்கு 10 மணிநேரங்கள் வேலைசெய்யும்வகையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் பெல்ஜியம் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தியிருந்தது.
ஐஸ்லாந்து, அமெரிக்கா, கனடா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் உள்ள வணிகங்களும் இந்த பரீட்சார்த்த முயற்சியை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்